பேஸ்புக்கில் நடைபெறும் மிகப்பெரும் மோசடி

நூறு கோடிக்கும் மேலான பயனாளர்களைக் கொண்டு மிகப்பெரிய சமூக தளமாக
விளங்குகிறது பேஸ்புக் தளம். வெறும் சமூக தளமாக மட்டுமல்லாமல் எந்தவொரு
செய்தியையும், அது உண்மையாக இருந்தாலும், வதந்தியாக இருந்தாலும்,  குறைவான
நேரத்தில் அதிக மக்களிடம் கொண்டு செல்லும் மிகப்பெரிய  மீடியாவாகவும்
செயல்படுகிறது.

கோடிக்கணக்கான மக்கள் இருக்கும் இப்படியொரு தளத்தை மோசடி பேர்வழிகள் சும்மா விடுவார்களா? நம்மை ஏமாற்ற இங்கும் வலை வீசுகிறார்கள் ஏமாற்று பேர்வழிகள் (Spammers). அவர்கள் வீசும் பல வழிகளில் ஒன்றை இங்கே பார்ப்போம்.

இது எங்கிருந்து தொடங்கும் என்று நமக்கு தெரியாது. நம்முடைய பேஸ்புக் நண்பர் அவரின் பேஸ்புக் பகிர்வில் நம்மை டேக் செய்திருப்பதாக நமக்கு அறிவிப்பு காட்டும்.

பார்த்ததும் குழப்பமடைய செய்யும் விதமாக ஒரு சுட்டியை பகிர்ந்திருப்பார். உதாரணத்திற்கு xn--47aaeaba.com என்ற முகவரி.

அதனை க்ளிக் செய்தால் வேறொரு தளத்திற்கு செல்லும். உதாரணத்திற்கு worldmedya.net

அந்த தளம் உங்கள் உலவிக்கு ஏற்றார் போல நீட்சி (Extension) ஒன்றை நிறுவச் சொல்லும்.

பயர்பாக்ஸ் உலவியாக இருந்தால் பின்வருமாறு இருக்கும்.

கூகுள் க்ரோம் உலவியாக இருந்தால் பின்வருமாறு காட்டும்.

வீடியோவை பார்க்க Flash Player-ஐ நிறுவச் சொல்லும். அதை க்ளிக் செய்தால் க்ரோம் நீட்சி (Extension) ஒன்றை நிறுவச்சொல்லும்.

இவற்றை நம்பி பயர்பாக்ஸிலோ, க்ரோமிலோ இந்த நீட்சியை (Extension) நிறுவினால் உங்கள் உலவி உங்களிடம் இல்லை.

இந்த நீட்சி (Extension) என்னென்ன செய்யும்?

1. உங்கள் உலவியில் நடப்பவற்றை தொடர்ந்து கண்காணிக்கும்.

2. நீங்கள் பேஸ்புக் தளத்தை திறக்கும் போது நீங்கள் உள்நுழைந்திருக்கிறீர்களா? என்று பார்க்கும்.

3. அப்படி உள்நுழைந்திருந்தால் ஜாவா நிரல் ஒன்றை நீட்சியில் நிறுவும்.

இந்த நிரல் மூலம் மோசடி பேர்வழிகள் உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் கணக்கு மூலம் குறிப்பிட்ட பேஸ்புக் பக்கங்களுக்கு லைக் கொடுக்க முடியும், உங்கள் நண்பர்களுக்கு செய்தி அனுப்ப முடியும், நீங்கள் இணைந்திருக்கும் பேஸ்புக் பக்கங்களில் கருத்துரை இட முடியும், இது போன்ற ஸ்பாம் இணைப்பை பகிர்ந்து உங்கள் நண்பர்களை டேக் செய்ய முடியும், இப்படி என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்.

தற்போது இந்த மோசடி பேர்வழிகள் செய்வது, புதிய பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய வைப்பார்கள். அதிகமான லைக் கிடைத்த பிறகு அந்த பேஸ்புக் பக்கத்தை விற்றுவிடுவார்கள்.இப்படி தொடர்ந்து நடைபெறும். மேலும் மேலே சொன்ன தளங்களில் கூகுள் ஆட்சென்ஸ் விளம்பரம் உள்ளது. அதன் மூலமும் இவர்களுக்கு பணம் கிடைக்கும்.

இது ஓரிரு நாளில் முடிந்துவிடும் மோசடி இல்லை. ஒவ்வொரு நாளும் புதுப்புது பெயர்களில்முளைத்துக் கொண்டே இருக்கும்.

இதையும் படிங்க:  கூகிள் ப்ளஸ், ஃபேஸ்புக் மற்றும் ப்ளாக்கர்

இது போல உங்கள் நண்பர்கள் மூலம் வந்தால் புறக்கணித்துவிடுங்கள். நண்பர்களுக்கு இது பற்றி தெரிவித்துவிடுங்கள்.

ஒருவேளை மேலே சொன்ன நீட்சியை நிறுவியிருந்தால்,

1. முதலில் நீட்சியை நீக்கிவிடுங்கள்.

2. பிறகு பேஸ்புக்கில் கடவுச்சொல்லை மாற்றிவிடுங்கள்.

3. தேவைப்பட்டால் உலவியையும் நீக்கிவிட்டு புதிதாக நிறுவுங்கள்.

4. உங்கள் டைம்லைனில் நீங்கள் பகிராத ஒன்று இருக்கிறதா? என்று பார்த்து நீக்கிவிடுங்கள்.

5. நீங்கள் லைக் செய்யாத பக்கங்கள் லைக் செய்யப்பட்டிருக்கிறதா? என்று பார்த்து Unlike செய்துவிடுங்கள்.

இதே மோசடி வேறு சில வழிகளிலும் வரும். அவைகள்,

1. John Cena of WWE died in a head injury while training!என்று பேஸ்புக் கம்மென்ட்களில் பார்க்கலாம். இது பற்றிய வீடியோ:

2. 100 டாலர் மதிப்புள்ள ஸ்டார்பக்ஸ் காபி அன்பளிப்பு அட்டை. இது பற்றிய வீடியோ:

3. உங்கள் பேஸ்புக் தளத்தின் கலரை மாற்றுங்கள் என்று வரும்.

4. உங்கள் ப்ரொபைலை யாரெல்லாம் பார்த்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்
 என்று வரும்.

இது போன்று மோசடி பேர்வழிகள் எண்ணற்ற முறையில் நமக்கு வலை வீசுகிறார்கள். இவற்றில் சிக்காமல் பாதுகாப்புடன் இருங்கள்!

குறிப்பு 1: பதிவில் சொன்ன மோசடியால் பாதிக்கப்பட்ட நண்பர் ஒருவருக்காக உதவி செய்ய முற்பட்டபோது தான் மேலே சொல்லப்பட்ட தகவல்கள் Bit Defender தளத்தில் கிடைத்தது.

குறிப்பு 2: இந்த பதிவின் சுட்டியையோ, அல்லது முழு பதிவையும் காப்பி செய்தோ தாராளமாக பகிரலாம். காப்பி செய்து பகிர்வதாக இருந்தால் குறைந்தபட்சம் www.bloggernanban.com என்ற முகவரியை சேர்த்து பகிரவும்.

38 thoughts on “பேஸ்புக்கில் நடைபெறும் மிகப்பெரும் மோசடி”

  1. மிக உபயோகமான தகவல்! நான் கொஞ்சம் உஷார் பார்ட்டி என்பதால் கேம் ரிக்வெஸ்ட், அப்ளிகேஷன் ரிக்வெஸ்ட் என்று கண்டதும் வந்தால் உடனே தவிர்த்து விடுவேன்! 🙂

  2. // முதலில் நீட்சியை நீக்கிவிடுங்கள். // நீட்சின்னா என்னா?? எதுவும் நீளமா இருக்குமா??? அவ்வ்வ்வ்.. முடியல.. ஏன் இவ்வளவு காம்ப்லிகேட்டட் வார்த்தைஸ்???? சிம்பிளா ஆங்கிலத்திலே சொல்லலாமே????

  3. நல்ல தகவல் பாசித். இது போல் தான் பல ரிகஸ்டுகள் வருகின்றன. ஒன்றையும் ஏறெடுத்து பார்ப்பது கிடையாது.

  4. அட கடவுளே சொல் பேச்சு கேக்காத பயபுள்ளைகளை எப்படி இந்த மாதிரியான அட்டகாசத்தில் இருந்து காப்பாத்தறது தகவல்பகிர்வுக்கு நன்றி

  5. இந்தக் கண்ட்ராவி பேஸ் புக்கினால் என்ன பயன் என்று எனக்கு இருவரை புரியவில்லை. நானும் ஒரு கணக்கு வைத்திருக்கிறேன்.

  6. அஸ்ஸலாமு அலைக்கும் அப்துல் பாஸித்,
    மிகச் சிறப்பான விளக்கங்கள்
    அருமையான பகிர்வு.
    நிச்சயம் பலருக்கும் பயன்படும்.
    உங்களது எச்சரிக்கை பதிவுகள் தொடர வாழ்த்துகிறேன்.

  7. தமிழில் எழுதுவது நல்லது தானே..
    Extension என்பதற்கு நீட்சி என்பது மிக பொருத்தமான வார்தை தான்.
    புதிதாக இருந்தால் பழகிக்கொள்ளுங்கள்.
    English simple உம் இல்லை தமிழ் complicated உம் இல்லை..
    தமிழனுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கும் நிலையில் தான் இருக்கிறோம்.

  8. இதுக்குத்தான் எதையும் download/install பண்ணணும்னா என்னை மாதிரி சோம்பல்படறவங்களா இருக்கணும். சோம்பேறிங்ககிட்ட இந்த spammers பாச்சா பலிக்காது. 🙂

    /இந்த பதிவின் சுட்டியையோ, அல்லது முழு பதிவையும் காப்பி செய்தோ தாராளமாக பகிரலாம். காப்பி செய்து பகிர்வதாக இருந்தால் குறைந்தபட்சம் http://www.bloggernanban.com என்ற முகவரியை சேர்த்து பகிரவும்./ என்னே ஒரு பெருந்தன்மை….!!!

  9. Extension என்பதற்கு நீட்சி மிகப் பொருத்தமான வார்த்தை தான்.
    புதிதாக இருந்தால் பழகிக்கொள்ளுங்கள். இல்லையென்றால் Google translate உங்களுக்கு கை கொடுக்கும்.
    English simple உம் இல்லை தமிழ் complicated உம் இல்லை.
    தமிழனுக்கு தமிழ் சொல்லி தரும் நிலையில் தான் இன்னும் இருக்கிறோம்.

    // அவ்வ்வ்வ்.. முடியல.//

    தமிழில் பேசுவது ஒன்றும் கெட்டவார்த்தை இல்லை

  10. இந்த வலைப்பதிவை என்னுடைய முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளேன்.தகவலுக்கு மிக்க நன்றி சகோ.

  11. பயனுள்ள பதிவு.

    நான் ஃபேஸ்புக் பக்கம் போவது அரிது. ஆனால் எப்பவாவது என் பக்கம் போய் எட்டிப்பார்த்தால் பூனை இல்லாத வீட்டில் கும்மாளம் போடும் எலிகளாய் அங்கே நிறையப்பேர்.

    எலிகளை எப்படி விரட்டுவது?

  12. தகவலுக்க்கு மிக்க நன்றிங்க

    இப்போ அதிகமா பேஸ் புக்ல இருக்கேன் ..

    உபயோகமான தகவலா இருக்கு

    பார்த்து இருந்துக்கறேன்

  13. ஆங்கிலத்திலேயெ பிறந்து ஆங்கிலேத்திலேயே வளர்ந்த உங்களுக்கு நம் உயர்தனி செம்மொழியின் செம்மை எவ்வளவு சொன்னாலும் புரியாது. ஆண்டவா நான் எங்க போய் இவங்களுக்கு தமிழோட அருமையை உணர்த்துவன்….. ஈஸ்வர……!

  14. நிச்சயம் முகநூல் பயன் படுத்துவோர் அனைவரும் தெரிந்து
    கொண்டு தங்களை பாது காத்து கொள்ளவேண்டும் நன்றி
    வாழ்த்துக்கள்

  15. வணக்கம்
    இன்று உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/09/RAJA-DAY-8.html?showComment=1409528738840#c2410022749007300165

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-