பதிவுலகம் – ஒரு வரலாற்றுப் பயணம்

மனிதர்களைப் பொருத்தவரை தேவை அதிகரிக்க அதிகரிக்க அதற்கான தேடலும்
அதிகரித்துக் கொண்டே உள்ளது. ஆனால் இணையத்தைப் பொருத்தவரையோ தேடல்
அதிகரிக்க அதிகரிக்க இணையத்தின் தேவையும் அதிகரித்துக் கொண்டு உள்ளது.
காரணம் எந்த ஒரு சிறு விசயதிற்கான தேடலையும் இணையமே நிறைவு செய்து
வைக்கிறது.


இன்றைய தினத்தில் நாம் உபயோகித்துக் கொண்டிருக்கும் இணைய தொழில்
நுட்பத்திற்கும், அன்றைய நுட்பத்திற்கும் நிறையவே வித்தியாசம்
இருந்துள்ளது. இணைய உலகின் அசுர வளர்ச்சி 1990 களின் பிற்பகுதியில் தொடங்கி
இன்றும் ஒரு முடிவில்லா நிலை நோக்கி வளர்ந்து கொண்டே செல்கிறது. இணைய
வளர்ச்சியும் பதிவுலக வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று இணையான ஒரே நேர்கோட்டில்
பயணிப்பதால், இணைய மற்றும் பதிவுலக வளர்சியை 1990-க்கு முன்-பின் என்று இரு
வகையாகப் பிரிக்கலாம்.

இன்று நம்மில் பெரும்பாலானவர்கள் உபயோகப்படுத்தும் பிளாக்கர் இருபதாம்
நூற்றாண்டின் இறுதியிலும் வோர்ட்பிரஸ் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின்
தொடக்கத்திலும் தொடங்கப்பட்ட தளங்கள். “அப்படியென்றால் அதற்கு முன் யாரும்
தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவில்லையா?” என்றொரு கேள்வி எழலாம்.

விடை தேட, 1990ம் ஆண்டிற்கு முன் இருந்து நமது பயணத்தை தொடங்குவோம்.

அமெரிக்க ராணுவ முகாம்களுக்குள் ரகசிய கருத்துப் பரிமாற்றம் செய்து
கொள்வதற்கான தேடலில் இருந்து தொடங்குகிறது இணையத்தின் வரலாறு. பின்
படிப்படியாக அமெரிக்க அரசு அலுவலகங்களும் சில முக்கியமான பல்கலைக்
கழகங்களும் இணையம் மூலம் இணைக்கப்பட்டன. இணையத்தின் தேவை வளர வளர, கொஞ்சம்
கொஞ்சமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் இணைய சேவை விரிவுபடுதுத்தப்பட்டது.

1990க்கு முன் யூஸ்நெட்(Usenet) என்னும் இணைய சேவை மூலம் பொதுமக்கள் தங்கள்
கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். யூஸ்நெட் என்பது பல சர்வர்கள்
இணைக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பப் பின்னல். ஒவ்வொரு சர்வரும் மற்றொன்றுடன்
இணைக்கபட்டிருக்கும். விளையாட்டு, அரசியல், சினிமா, வர்த்தகம் என்று
பல்வேறு வகையான கருத்துப் பரிமாற்றம் நிகழும் தளமாகவே விளங்கியது. ஒவ்வொரு
தனிதனி கலந்துரையாடல் பிரிவுகளையும் “நியூஸ் குரூப்” என்றழைக்கிறார்கள்.
இக்கால சமூக வலைதளங்களின் முன்னோடியாக இந்த யூஸ்நெட்டைக் குறிப்பிடலாம்.

யூஸ்நெட்டில் உங்கள் கருத்தை பதிவு செய்ய அந்த நியூஸ் குரூப் பெயரையும்
இணைத்து பதிவிட வேண்டும். உங்கள் சர்வரில் பதியப்படும் கருத்து சிறிது
நேரத்தில் மற்ற சர்வர்களையும், உங்கள் நியூஸ் க்ருப்பை சேர்ந்தவர்களையும்
சென்று சேரும். உங்கள் நியூஸ் குரூப்பில் இருப்பவருடன் மட்டுமே உங்களால்
கலந்துரையாட முடியும். மேலும் உங்கள் பதிவுகள் முப்பது நாட்களுக்குப் பின்
சர்வரில் இருந்து அழிக்கப்பட்டு விடும்.

Tim Berners-Lee

1990 இன் இறுதியில் டிம் பெர்னர்ஸ் லீ என்பவர் www என்றறியப்படும் வோர்ல்ட் வைட் வெப் (World Wide Web)
என்னும் நுட்பத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். அன்றிலிருந்து தனது
புதிய பயணத்தை தொடங்கிய இணைய வளர்ச்சி இன்றளவும் அதே அசுர வேகத்தில் சென்று
கொண்டிருக்கிறது. மேலும் இவருடைய மற்ற கண்டுபிடிப்புகளான HTTP, HTML மற்றும் XML போன்றவை இணைய கட்டமைப்பின் மிக முக்கியமான தூண்கள்.

இதையும் படிங்க:  பேஸ்புக்கில் பிடிக்காத செய்திகளை ஓரங்கட்டலாம்
Justin Hall

ஜஸ்டின் ஹால் என்னும் அமெரிக்கர் தான் உலகின் முதல் பதிவர் மற்றும் பதிவுலக
முன்னோடியாக அறியப்படுகிறார். 1994ம் ஆண்டும் தனது வலையுலக பயணத்தை
ஆரம்பித்த ஜஸ்டின் ஹால் விடாது தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
அவரது கல்லூரி காலத்தில் இருந்து எழுத தொடங்கிய ஜஸ்டின் 2014வது ஆண்டில்
நுழையும் பொழுது வலையுலகில் (links.net) தனது இருபதாவது வருடத்தை அடைந்திருப்பார்.

1994ம் வருடத்தில் பதிவுலகம் இணைய உலகினுள் முழுமையாக காலடி எடுத்து
வைத்தது. இந்த வருடத்தில் பல அமெரிக்கர்கள் தங்கள் வாழ்வியல் அனுபவங்களை
ஆன்லைன் டைரி மூலம் தொகுக்க ஆரம்பித்திருந்தனர். இந்த ஆன்லைன் டைரியே
தற்போது பல வடிவங்களில் பதிவுலகத்தை ஆக்கிரமித்து வருகிறது.

1998ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஓபன் டைரி ஆரம்பிக்கப்பட்ட சிறிது
காலத்திற்குள்ளாகவே ஆயிரம் பயனர்களையும் பல லட்சம் பக்கப் பார்வைகளையும்
பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Jorn Barger

நம்முடைய கருத்துகளை, அனுபவங்களை இணையத்தில் பதிவு செய்வதை web log
என்கிறோம். ஜார்ன் பர்கர் என்னும் அமெரிக்கர் 1997இல் web log என்ற இரு
வார்த்தைகளையும் இணைத்து weblog குறிப்பிடத் தொடங்கினார். பின் பீட்டர்
மேர்ஹோல்ஸ் என்னும் அமெரிக்கர் 1999 வருடம் weblog என்பதை இரண்டாக உடைத்து
we blog என்று தனது வலைப்பூவில் குறிப்பிட்டு இருந்தார். பீட்டர் மூலமே
ப்ளாக் என்னும் வார்த்தை நமக்கும் ஆங்கிலத்திற்கும் கிடைத்தது. பின் அதே
99ம் வருடம் ஈவன் வில்லியம்ஸ் “பிளாக்கர்” என்னும் வார்த்தையை பயன்படுத்தத்
தொடங்கினார். நாம் இன்று பயன்படுத்திக் கொண்டிருக்கும் பிளாக்கரை உலகிற்கு
அறிமுகப் படுத்தியது இவரும் இவரது சகாவான மேக் ஹரிகலுமே.

பிளாக்கர் வரலாறு:

ஈவன் வில்லியம்ஸ், மேக் ஹரிகல் இந்த இருவரும் சேர்ந்து ஆரம்பித்த நிறுவனமான
பைரா லேப்ஸ் (PYRA LABS) மூலம் 1999ம் ஆண்டு பிளாக்கரை இணைய உலகினுள் உலவ
விட்டனர். பிளாக்கர் தனது சேவையை இலவசமாகவே தன் பயனர்களுக்கு வழங்கியது.
2001ம் வருடம் நடைபெற்ற அமெரிக்க தேர்தலின் போதும், 2002ம் வருடம் நடைபெற்ற
ஈராக் போரின் போதும் பலதரப்பட்ட மக்களால் பிளாக்கரும் மற்ற வலைசேவைகளும்
அதிகமாக உபயோகப் படுத்தப்பட்டன. பதிவுலகின் சிறப்பான வளர்ச்சிக்கு இந்த இரு
நிகழ்வுகளும் மிக முக்கிய காரணியாக கருதப்படுகின்றன. உடனுக்குடனான
செய்திகளை ஊடங்களை விட பதிவுலகம் மிக வேகமாக வழங்கத் தொடங்கியதும்,
நடுநிலையான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டதுமே பதிவுலகம் பலராலும்
கவனிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது.

இந்நேரத்தில் பிளாக்கர் தளத்தின் இலவசம் என்னும் வார்த்தை மிக அதிக
பயனர்களை குறைந்த காலத்தில் பெற்றுத் தந்துவிட்டது. இலவசத்தையும் மீறி
பிளாக்கர் தளம் உபயோகம் செய்வதற்கு மிக எளிமையாக இருந்தது என்பதே அதன்
முதல் வெற்றிக்கு காரணம்.

இதையும் படிங்க:  ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-2]

அதிகமான பயனர்களை சமாளிக்க முடியாத பைரா லேப்ஸ் தடுமாறத் தொடங்கியது.
“பிளாக்கர் தளத்தின் கட்டுமான செலவினை கருத்தில் கொண்டு அதற்கு நன்கொடை
வழங்க தயாராக இருக்கும் பயனர்கள் நன்கொடை அளிக்கலாம்” என்று விளம்பரம்
செய்யும் நிலைக்கு வந்துவிட்டனர். இருந்தும் அவர்களால் தொடர்ந்து நடத்த
முடியவில்லை. பல மாதங்கள் சம்பளம் பெறாமல் உழைத்துக் கொண்டிருந்தனர் பைரா
லாப்சின் ஊழியர்கள். இறுதியில் 2003ம் ஆண்டு பிளாக்கரை கூகிள்
நிறுவனத்திடம் விற்றுவிட்டு ஈவன் வில்லியம்ஸ் அதன் பொறுப்புகளில் இருந்து
மொத்தமாக விலகிக் கொண்டார்.

கூகிள் நிறுவனத்தின் தொழில்நுட்ப பலமும், பிளாக்கர் தளத்தின் எளிதான
கட்டுமானமும் ஒன்றிணைய பிளாக்கர் இன்னும் வேகமாக உருமாற்றம் பெறத்
தொடங்கியது.

மே 9 2004 – கூகிள் நிறுவனம், பிளாக்கர் தளத்தை பல்வேறு
மாற்றங்களுடன் அறிமுகப்படுத்தினர். பதிவுலகின் தொடக்க காலத்தில், ஒரு பயனர்
தான் விரும்பும் மாற்றங்களை செயல்படுத்த தானே ப்ரோக்ராம் எழுதிக் கொள்ள
வேண்டும். கூகிள் இதை மாற்றி அமைத்தது. கட்டுகோப்பான கோட்பாடுகள் அடங்கிய
பல டெம்ப்ளட்களை இலவசமாக தன் பயனருக்கு வழங்கியது. பதிவுகளை சேமிக்கும்
அமைப்பை இன்னும் சிறப்பாக மற்றும் எளிமையாக மாற்றி அமைத்தது. மின்னஞ்சல்
மூலம் பதிவுகள் மற்றும் பின்னூட்டம் இடும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது.

ஆகஸ்ட் 14 2006 –
பிளாக்கரின் முதல் பீட்டா வெர்சனை
வெளியிட்டது. பீட்டா என்பதை சோதனை ஓட்டம் என்றும் குறிப்பிடலாம். இந்த
பீட்டா ஓட்டத்திற்கு இன்வடார் என்று பெயரிட்டது கூகிள். மேலும் 2007ம்
வருடம் முழுமையான பதிப்பை தனது பயனர்களுக்கு வழங்கியது கூகிள் நிறுவனம்.
அதில் ஆங்கிலம் தவிர்த்து மேலும் சில மொழிகளையும் பயன்பாட்டுக்கு அளித்தது.

பதிவுகளுக்கான லேபில்கள், டெம்ப்ளேட் டிசைன் செய்யும் பொழுது பயன்படுத்தும்
DRAG & DROP, அனுமதி பெற்ற நபர்களை மட்டும் வலைப்பூவினுள்
அனுமதிக்கும் வசதி( PRIVATE BLOG) என்று பல புதிய வசதிகளை 2007ம் ஆண்டு
வெளியிட்ட தனது புதிய பதிப்பில் பிளாக்கர் அறிமுகப்படுத்தியது.

செப்டம்பர் 2009 – பிளாக்கரின் பத்தாவது ஆண்டு விழாவிற்கு தன்னை
தயார்படுத்தியது கூகிள். இந்த விழாவின் பொழுது பிளாக்கரில் இன்னும் பல
புதிய வசதிகளை அறிமுகம் செய்தது. இந்நேரத்தில் கூகிள் பிக்காசா என்னும்
புகைப்பட கோப்புகளை கையாளும் சேவையை தன்னுடன் இணைத்திருந்தது. இதனால்
பிளாக்கரில் புகைப்படங்களை கையாளும் வசதி மேம்படுத்தப்பட்டது. உங்களுக்குத்
தெரியுமா, உங்கள் பதிவுகளில் இணைக்கப்படும் அனைத்து படங்களும் பிக்காசா
மூலமே முன்பு சேமித்து வைக்கப்பட்டது என்று?

நீங்கள் இருக்கும் இடத்தை குறிக்க உதவும் கூகிள் மேப் (Google Map) வசதி இணைக்கப்பட்டது.

இதையும் படிங்க:  ஜிமெயிலில் புது வசதி: Preview Pane

பதிவிடும் நேரம் பற்றி பிறர் அறிந்து கொள்ளும் வசதி எற்படுத்தப்பட்டது.

பதிவை பதிவிடுவதற்கு முன் முன்னோட்டம் (PREVIEW) பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழ் உட்பட 52 மொழிகள் பிளாக்கர் உடன் இணைக்கப்பட்டது.

ஒரு வலைப்பூவில் ஒரே ஒருவர் தான் ஆசிரியராக இருக்க முடியும் என்ற நிலை
மாறி, ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே வலைப்பூவில் ஆசிரியராக செயல்படலாம்
என்ற மிக முக்கியமான வசதியையும் பிளாக்கர் ஏற்படுத்திக் கொடுத்தது.

பிளாக்கர் பயனர் கணக்கு பற்றி சில முக்கியமான தகவல்கள்

உங்களுடைய ஒவ்வொரு கூகிள் கணக்கைக் கொண்டும் உங்களால் 100 வலைப்பூக்கள் உருவாகிக் கொள்ள முடியும்.

முதலில் உங்களால் 2000 லேபிலுக்கு மேல் உபயோகப்படுத்த முடியாது, தற்போது
அது 5000 ஆக அதிகரிக்கபட்டுள்ளது. ஒரு பதிவில் 20 லேபிலுக்கு மேல்
உங்களால் உபயோகப்படுத்த முடியாது, மேலும் அந்த லேபில்கள் 150
எழுத்துக்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

1GB ஆக இருந்த பிளாக்கரின் தகவல் கொள்ளளவு தற்போது 5GB வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு வலைப்பூவில் உங்களால் எத்தனை பதிவுகள் வேண்டுமானலும் பதிவு செய்யப்படலாம்.

உங்கள் பதிவு எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். பதிவின் நீளம்
அதிகமானால் பக்கங்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஒரு பக்கம் 1MB வரை மட்டுமே
இருக்க வேண்டும். மேலும் ஒரு பதிவிற்கு அதிகபட்சமாக உங்களால் இருபது
பக்கங்கள் மட்டுமே எழுத முடியும்.

உங்கள் வலைப்பூவில் 100 ஆசிரியர்களுக்கு மேல் சேர்க்க முடியாது, மேலும்
உங்களுடையது கட்டுபடுத்தப்பட்ட வலைபூ (பிரைவேட் ப்ளாக்) என்றால் 100
மெம்பர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ள முடியும்.

பாகிஸ்தான், சீனா உட்பட 13 நாடுகளில் பிளாக்கர் பல சமயங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தியப் பதிவுலகின் முன்னோடி அமிட் அகர்வால், இவர் இரண்டு முறை சிறந்த
தொழில் நுட்பத்திற்கான இன்டிப்ளாக் விருதை பெற்றுள்ளார் (2006 & 08)

தமிழ் பதிவுலகின் முன்னோடி கிழக்குப் பதிப்பகத்தின் நிறுவனர் பத்ரி சேசாத்திரி என்று படித்ததாக நியாபகம்.

பின் குறிப்பு : சமூக வலைதளங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கும்
பிளாக்(கர்) வரலாறு பற்றிய பதிவை பிளாக்கர் நண்பன் தளத்தில் பதிவு செய்வது
மிகப் பொருத்தமாக இருக்கும் என்ற ஒரே காரணத்தால் இங்கு பதிவு செய்கிறேன்.
வாய்பளித்த பிளாக்கர் நண்பனுக்கு என் நன்றிகள்.

சீனு
பதிவர் பற்றி:

கணினி துறையில் பணிபுரியும் சீனு அவர்கள் எழுத்தாளர் சுஜாதாவின் தீவிர ரசிகர். புத்தகம், சினிமா, பயண அனுபவங்கள் பற்றி திடங்கொண்டு போராடு என்னும் வலைத்தளத்தில் எழுதி வரும் இவர், பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.