ஸ்டேடியா (Stadia) என்னும் க்ளவுட் கேமிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். இதன் மூலம் உயர்தொழில்நுட்ப விளையாட்டுக்களைக் கூட சாதாரண கணினிகளில் விளையாட முடியும்.
வீடியோ கேமிங் என்பது பணம் கொழிக்கும் துறைகளில் ஒன்றாகும். ஆரம்பத்தில் கணினி மற்றும் கன்சோல் (Console) கேம்களில் மட்டும் கவனம் செலுத்திய தயாரிப்பாளர்கள் தற்போது மொபைல் போன்களின் வளர்ச்சியைக் கண்டு அதன் மீதும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இதில் பணம் சம்பாதிப்பது விளையாட்டை தயாரிப்பவர்கள் மட்டுமல்ல, அதனை விளையாடுபவர்களும் தான். வீடியோ கேம் தயாரிப்பாளர்கள் தங்கள் கேமை விற்பனை செய்தும் அல்லது கேமை இலவசமாக கொடுத்து கூடுதல் வசதிகளை கேமின் உள்ளே விற்பனை செய்தும் சம்பாதிக்கிறார்கள்.
கேம் விளையாடுபவர்கள் தங்கள் விளையாடும் வீடியோவை (Gameplay) யூட்யூப், ட்விட்ச், பேஸ்புக் போன்ற தளங்களில் பதிவேற்றம் செய்து அல்லது லைவ் ஸ்ட்ரீம் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள்.
மேலும் சில கேம் தயாரிப்பாளர்கள் தங்கள் கேமை விளம்பரப்படுத்த மிகப்பெரிய அளவில் பரிசுப்போட்டி நடத்துகிறார்கள். உதாரணத்திற்கு PUBG கேம் தயாரிப்பாளர்கள் இந்தியா உள்பட பல நாடுகளில் மிகப்பெரிய அளவில் போட்டிகளை நடத்துகிறார்கள். இதில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுபவர்கள் லட்சக்கணக்கில் பரிசுகளை அள்ளிச் செல்கின்றனர்.
தற்போது உயர்தொழில்நுட்ப விளையாட்டுக்களை விளையாட உங்களிடம் ப்ளேஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ் போன்ற கன்சோல்கள் அல்லது உயர்தொழில்நுட்ப கணினிகள் இருக்க வேண்டும். பெரும்பாலானோர் இதற்கு சக்தியுள்ளவர்களாக இருக்க மாட்டார்கள். இதற்கு தீர்வாக வந்துள்ளது தான் கூகுள் ஸ்டேடியா.
கூகுள் ஸ்டேடியா
கூகுள் ஸ்டேடியா என்பது கிளவுட் கேமிங் சேவையாகும். அதாவது கேம்கள் எல்லாம் கூகுளின் சர்வர்களில் இருக்கும். அந்த கேம்களை நீங்கள் டவுன்லோட் செய்யும் அவசியமும் இல்லை. உங்கள் குறைந்த தொழில்நுட்பம் கொண்ட சாதாரணக் கணினிகளிலும் கூட க்ரோம் உலவியில் உயர்தொழில்நுட்ப கேம்களை ஒரு க்ளிக் செய்து விளையாடலாம். மேலும் மொபைல், டேப்லட், டிவிக்களிலும் நீங்கள் விளையாடலாம்.
கூகுள் ஸ்டேடியா வசதிகள்
பல்வேறு சாதனங்கள்
நீங்கள் மொபைலில் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் மொபைலில் சார்ஜ் இல்லை என்றால் உடனடியாக உங்கள் கணினியில் அந்த விளையாட்டை தொடர்ந்து விளையாடலாம். இப்படி எந்தவொரு சாதனத்திலிருந்தும் வேறொரு சாதனத்திற்கு மாறி விளையாடலாம்.
கண்ட்ரோலர்
உங்களிடம் ஏற்கனவே வைஃபை வசதிக் கொண்ட ப்ளேஸ்டேஷன் அல்லது எக்ஸ்பாக்ஸ் கண்ட்ரோலர் இருந்தால் அதனையே பயன்படுத்தலாம். அல்லது கூகுள் ஸ்டேடியா கண்ட்ரோலர் விலைக்கு வாங்கி விளையாடலாம். இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
யூட்யூப்
ஸ்டேடியா சேவை யூட்யூபுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் விளையாடும் வீடியோவை நேரடியாக யூட்யூபில் ஒளிப்பரப்பலாம்(Live Stream). மேலும் யூட்யூபில் (ஸ்டேடியாவில் உள்ள) ஒரு கேம் ட்ரைலரை பார்க்கும்போது அந்த வீடியோவில் உள்ள “Play Now” பட்டனை க்ளிக் செய்து சில வினாடிகளில் அந்த விளையாட்டை நீங்கள் விளையாடலாம்.
மேலும் ஸ்டேடியாவில் “Slate Share” என்னும் வசதி மூலம் லைவாக விளையாடிக்கொண்டிருக்கும்போதே உங்கள் நண்பர்களையோ, உங்கள் சேனல் பார்வையாளர்களையோ உங்களுடன் விளையாட அழைக்கலாம்.
மேலும் நீங்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது ஏதாவது ஒரு நிலையில் எப்படி கடப்பது? என்று தெரியாமல் இருந்தால் Google Assistant வசதி மூலம் அதனை முடிப்பதற்கு நீங்கள் கேமை விட்டு வெளியேறாமலேயே யூட்யூப் வீடியோவை பார்க்கலாம்.
4K HDR at 60 FPS
உங்கள் சாதாரண கணினிகளில் கூட உங்கள் இணைய வேகத்தைப் பொறுத்து 4K HDR at 60 FPS தரத்தில் விளையாடலாம்.
கூகுள் ஸ்டேடியா சேவை இந்த வருடத்தில் அமெரிக்கா, கனடா, யுகே மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மட்டும் வெளியிடப்படுகிறது. இதன் விலை விபரம் மற்றும் மற்ற நாடுகளில் வெளியிடப்படும் நாள் பற்றி இன்னும் அறிவிக்கவில்லை.
கூகுள் சொன்னபடி இது வேலை செய்தால் நிச்சயமாக இது கேமிங் உலகில் புரட்சியாக இருக்கும். ஆனால் இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் கூகுள் ஸ்டேடியாவில் விளையாடுவதற்கு உங்களிடம் குறைந்தபட்சம் 15 எம்பிபிஎஸ் வேக இணைய வசதி இருக்க வேண்டும்.
You must log in to post a comment.