5 லட்சம் கணக்குகள் பாதிப்பு – மூடப்படுகிறது கூகுள் ப்ளஸ்

கூகுள் ப்ளஸ் தளத்தில் கடந்த ஒருவருடமாக இருந்து வந்த பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஐந்து லட்சம் கூகுள்+ கணக்குகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும், இதன் காரணமாக கூகுள் ப்ளஸ் சேவையை முடக்கவுள்ளதாகவும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

2011-ஆம் ஆண்டு பேஸ்புக்கிற்கு போட்டியாக கூகுள் நிறுவனம் கூகுள் ப்ளஸ் என்னும் சமூக வலைதளத்தை அறிமுகம் செய்தது. ஆனால் கூகுள் எதிர்பார்த்தது போல வரவேற்பு கிடைக்கவில்லை. பிறகு தனது மற்ற சேவைகளில் கூகுள் ப்ளஸ் தளத்தை இணைத்தது. அப்போதும் பேஸ்புக்கிற்கு இணையாக போட்டியிட முடியவில்லை.

கூகுள் ப்ளஸ்ஸில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாட்டை பார்க்கும்முன் அதன் பயன்பாட்டை பார்த்துவிடுவோம்.

பொதுவாக சில இணையதளங்களிலோ அல்லது அப்ளிகேசன்களிலோ கணக்கு துவங்க பேஸ்புக், கூகுள் ப்ளஸ் கணக்கு மூலம் உள்நுழையும் வசதியை பார்த்திருப்பீர்கள். நாமும் நேரம் மிச்சமாகிறது என்று பேஸ்புக், கூகுள் ப்ளஸ் கணக்கு மூலம் உள்நுழைவோம்.

இப்படி நாம் உள்நுழைவதற்கு முன் என்னென்ன தகவல்கள் அந்த டெவலப்பர்களுக்கு தெரியும் என்பதனையும் அது காட்டும். பெரும்பாலும் அதை நாம் படிப்பதில்லை.

இப்படி கூகுள் ப்ளஸ் மூலம் நாம் உள்நுழையும்போது நாம் Public-ஆக வைத்துள்ள தகவல்கள் மட்டும் தான் டெவலப்பர்களுக்கு தெரிய வேண்டும். ஆனால் இந்த பாதுகாப்பு குறைபாடு காரணமாக நாம் பப்ளிக்காக வைக்காத ஈமெயில் முகவரி, வேலை, பாலினம், வயது போன்ற தகவல்களும் டெவலப்பர்களுக்கு தெரிவதாக கூகுள் தெரிவித்துள்ளது. மற்றபடி மொபைல் நம்பர் போன்ற மற்ற தகவல்கள் அவர்களுக்கு தெரியவில்லை எனவும் கூகுள் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த பாதுகாப்பு குறைபாடுபற்றி டெவலப்பர்களுக்கு தெரியாது எனவும், எந்த தகவல்களும் தவறாக பயன்படுத்தப்படவில்லை எனவும் கூகுள் தெரிவித்துள்ளது.

இந்த பாதுகாப்பு குறைபாடு கடந்த மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்டு அப்போதே சரி செய்யப்பட்டது என்று கூகுள் தெரிவித்துள்ளது.

இந்த பாதுகாப்பு குறைபாட்டை கூகிள் சரி செய்திருந்தாலும் கூகுள் ப்ளஸ் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் இன்னும் பத்து மாதத்தில், அதாவது அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் கூகுள் ப்ளஸ் நுகர்வோர் பதிப்பை மூடப்போவதாக கூகுள் தெரிவித்துள்ளது.

அதாவது நாம் கூகுள் ப்ளஸ் தளத்தை பயன்படுத்த முடியாது, ஆனால் மேலே சொன்னது போல கணக்கு உள்நுழைய பயன்படுத்தலாம்.

மறக்காமல் நமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்: https://www.facebook.com/bloggernanban/

நமது யூட்யூப் சேனலை subscribe செய்யுங்கள்: https://www.youtube.com/bloggernanban

இதையும் படிங்க:  ப்ளாக்கை பிரபலப்படுத்த "பரிசுப்போட்டி"

2 thoughts on “5 லட்சம் கணக்குகள் பாதிப்பு – மூடப்படுகிறது கூகுள் ப்ளஸ்”

  1. நம்மைப் போன்ற பதிவர்களுக்கு கூகுள்+ இன்னொரு பெரிய சந்தை. முகநூல் போல இதிலும் எக்கச்சக்கமான குழுக்கள் இருக்கின்றன. அவற்றில் பகிர்வதன் மூலம் ஏராளமான பார்வைகளும் நமக்குக் கிடைத்து வந்தன. இப்பொழுது கூகுள்+ முடக்கப்படுவதால் பதிவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள்.