ப்ளாக்கர் தளங்களுக்கு கூகுளின் பாதுகாப்பு வசதி

பிளாக்கர் தளங்களில் .com, .net போன்று கஸ்டம் டொமைன் (Custom Domain) வைத்திருக்கும் பயனாளர்களுக்கு கூகுள் தளம் புதிய பாதுகாப்பு வசதியை தந்துள்ளது. அது HTTPS எனப்படும் பாதுகாப்பு வசதி ஆகும்.பொதுவாக நம் இணையதள முகவரியை கொடுக்கும்போது http (Hypertext Transfer Protocol) என்று தொடங்கும். இவ்வாறு தொடங்கும் தளங்களுக்கு பாதுகாப்பு கிடையாது. அதுவே HTTPS எனத்தொடங்கும் தளங்கள் பாதுகாப்பானதாகும். https தளங்களுக்கும், பயனாளர்களுக்கும் இடையில் நடைபெறும் தகவல் பரிமாற்றங்கள் பாதுகாப்பாக இருக்கும். இதனால் தான் மின்னஞ்சல்கள், வங்கித் தளங்கள் போன்ற தகவல்/பண பரிமாற்றங்கள் நடக்கும் தளங்களின் முகவரிகள் https என்று தொடங்குகிறது.

பொதுவாக SSL Certificate என சொல்லப்படும் இந்த வசதியை சில டொமைன் விற்கும் தளங்கள் கூடுதல் விலைக்கு விற்கின்றன. தற்போது இவ்வசதியை ப்ளாக்கர் தளம் இலவசமாக தருகிறது.

இவ்வசதியை பெற Blogger தளத்தில் Settings => Basic பகுதிக்கு செல்லுங்கள்.
HTTPS என்பதற்கு கீழே, HTTPS availability என்ற இடத்தில் "Yes" என்பதை தேர்வு செய்யுங்கள்.HTTPS வசதி Process ஆகிறது என்று வரும். பிறகு உங்கள் தள முகவரியை https உடன் கொடுத்தால் வேலை செய்கிறதா? என்று பாருங்கள். உதாரணத்திற்கு https://www.bloggernanban.com

அப்படி வேலை செய்தால், அதே Settings => Basic பகுதியில் HTTPS redirect என்ற இடத்திலும் "Yes" கொடுங்கள்.

இது எதற்கென்றால், யாராவது உங்கள் http முகவரியை கொடுத்தால் தானாகவே https முகவரிக்கு மாறிவிடும்.


கவனிக்க: தற்போது https முகவரியை பயன்படுத்தினால் தமிழ்மணம் ஓட்டுபட்டை தெரிவதில் பிரச்சனை ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் இவ்வசதியை தவிர்த்துக் கொள்ளலாம்.

Google பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்

Google பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் மூலம் கூகுள் தனது பத்தொன்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது.

இன்றைய Doodle ஐ கிளிக் செய்வதன் மீது, கடந்த 19 ஆண்டுகளில் கூகுள் அறிமுகப்படுத்திய 19 டூடுல் விளையாட்டுகளை விளையாடலாம். மேலும் புதிதாக நோக்கியா மொபைல்களில் பிரபலமான பாம்பு விளையாட்டையும் விளையாடலாம். உங்களுக்கு எந்த விளையாட்டு பிடித்துள்ளது என்பதை தெரிவியுங்கள்.

ஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி?

பெரும்பாலான இணையதள வசதிகளை நாம் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் எனப்படும் ஈமெயில் நமக்கு அவசியமாகிறது. மின்னஞ்சல் சேவையில் சிறந்து விளங்கும் ஜிமெயில் ஐடி உருவாகுவது எப்படி? என்று பார்ப்போம்.மேலே உள்ள வீடியோவில் ஈமெயில் உருவாக்கும் வழிமுறையை எளிதாக விளக்கியுள்ளேன். குரல்பதிவு இல்லை, இருப்பினும் வீடியோவைப் பார்த்தாலே புரியும்.மின்னஞ்சல் உருவாக்கம் என்பது அடிப்படைத் தகவல், பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். கணினி அடிப்படைகளை இணையத்தில் பதிவு செய்வதற்காகவே இந்த வீடியோ. மேலும் பல வீடியோ பதிவுகளை எதிர்பார்க்கலாம்.

வேறு என்ன தகவல்களை வீடியோவாக நீங்கள் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதை கமெண்ட்டில் தெரிவிக்கலாம்.

யூட்யூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்

கூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்து வருவது நாம் அறிந்ததே! அதுவும் இந்திய நாட்டின் இணைய சந்தையை நன்கறியும் கூகுள் இந்திய மொழிகளுக்காக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

தற்போது குரல் தேடல் (Voice search) தயாரிப்பில் தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி, தெலுங்கு, உருது, குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளையும், சிங்கள மொழியையும் சேர்த்துள்ளது.

google tamil


இதன் மூலம் தட்டச்சு செய்வதற்கு பதிலாக குரல் மூலமாகவே தமிழில் பேசி தமிழில் தேடலாம்.

மேலும் உங்கள் ஆண்டிராய்ட் மொபைல்களில் GBoard அப்ளிகேசன் மூலம் தமிழில் பேசி தமிழில் தட்டச்சலாம். விரைவில் இவ்வசதி கூகுள் ட்ரான்ஸ்லேட் மற்றும் பிற தயாரிப்புகளில் கொண்டுவரப்படும் எனவும் கூகிள் தெரிவித்துள்ளது.

இது தொடக்கம் என்பதால் குரல் வழி தேடல்/தட்டச்சில் பிழைகள் வரலாம். ஆனா போகப்போக இவ்வசதி மேம்படுத்தப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.

இது பற்றிய செய்தியை படிக்க: Type less, talk more

டிஸ்னி சினிமாவை மிரட்டும் ஹேக்கர்கள்

கடந்த சில நாட்களாக ஹேக்கர்கள் வானாக்ரை என்னும் ரான்சம்வேரை பரப்பி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். தற்போது ஹேக்கர்கள் டிஸ்னி நிறுவனத்தின் வெளியிடப்படாத திரைப்படம் ஒன்றினை ஹேக் செய்து பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர்.ஹாலிவுட்டில் மிகப்பெரிய சினிமா நிறுவனமான வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் இன்னும் வெளியிடப்படாத திரைப்படம் ஒன்றினை ஹேக்கர்கள் திருடிவிட்டார்கள். அதனை இணையத்தில் வெளியிடாமல் இருக்க பிட்காயின் மூலம் மிகப்பெரும் தொகையை கேட்டிருக்கின்றனர். பணத்தை தரவில்லை என்றால் முதலில் படத்தின் ஐந்து நிமிடக் காட்சிகளையும், பிறகு இருபது நிமிடக் காட்சிகளையும் வெளியிடப்போவதாக மிரட்டியுள்ளனர்.

பணத்தை தர டிஸ்னி நிறுவனம் மறுத்துவிட்டதாகவும், FBI-யிடம் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. டிஸ்னி நிறுவனத்தின் Pirates of the Caribbean: Dead Men Tell No Tales, கார்ஸ் 3 ஆகிய படங்கள் இந்த வருடம் வெளிவருகிறது.

சைபர் க்ரைம் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை நாம் உணர்ந்து பாதுகாப்பாக இருப்பது நன்று!

WannaCry இணைய தாக்குதல் - செய்ய வேண்டியது என்ன?

இணையத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு செய்தி வானாக்ரை (Wanna Cry) என்னும் இணைய தாக்குதல் ஆகும். இந்தியா, ரஷ்யா, உக்கிரைன், தைவான் உள்பட 99 நாடுகள் இந்த இணைய தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனைகள் இந்த தாக்குதலால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான நோயாளிகளின் விவரங்கள் கணினிகளில் சேமிக்கப்பட்டிருந்ததால் சரிவர மருத்துவம் செய்ய முடியவில்லை.

வானா க்ரை (Wanna Cry) என்றால் என்ன?வானாக்ரை (WCry or Wanna Cry) என்பது தீங்கிழைக்கும் மென்பொருள் ஆகும். இதனை ரேன்சம்வேர் (Ransomware) என்றும் அழைக்கிறார்கள். இந்த தாக்குதல் மூலம் ஹேக்கர்கள் உங்கள் விண்டோஸ் கணினியில் உள்ள கோப்புகள் அனைத்தையும் மறையாக்கம்(Encrypt) செய்திடுவார்கள். 

பிறகு குறிப்பிட்ட தொகையை (300$ போல) அவர்களுக்கு செலுத்தினால் மட்டுமே உங்களது கோப்புகளை திரும்பப் பெறமுடியும். இதற்காக உங்கள் கணினியில் இரண்டு டைமர்கள் (Timer) காட்டும். ஒரு நேரம் முடிவதற்குள் பணம் செலுத்தவில்லை என்றால் மீட்புத்தொகை இரட்டிப்பாக்கப்படும். இன்னொரு நேரம் முடிவதற்குள் பணம் செலுத்தவில்லை என்றால் உங்கள் கோப்புகளை திரும்பப்பெறவே முடியாது. இந்த பணத்தை பிட்காயின் மூலம் மட்டுமே செலுத்த முடியும். பணம் கட்டிய பிறகு உங்கள் கோப்புகள் திரும்பக் கிடைக்கும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை.

இதை உருவாக்கியது யார்?

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (National Security Agency) பல்வேறு இணைய தாக்குதல் கருவிகளை உருவாக்கி வருகிறது. அவற்றில் ஒன்று தான் இந்த Ransomware. இதனை Shadow Brokers என்னும் ஹேக்கிங் குழு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. இந்த நிரலை தான் தற்போது வான்னா க்ரை தீம்பொருளுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள்.

எப்படி பரவுகிறது?

இணையத்தில் ஏதாவது ஒரு சுட்டியை (Link) க்ளிக் செய்வது மூலமாகவோ, அல்லது நம்பகத்தன்மையற்ற தளங்களில் இருந்து கோப்புகளை தரவிறக்கம் செய்வதன் மூலமாகவோ இந்த தீம்பொருள் உங்கள் கணினிகளை தாக்கும். பல கணினிகள் சேர்க்கப்பட்ட நெட்ஒர்க்கில் ஒரு கணினி பாதிப்படைந்தால் அது மற்ற கணினிகளுக்கு பரவும்.

நாம் செய்ய வேண்டியது என்ன?

ப்ளாக்கர் நண்பன் தளத்தில் வெளிவந்த இணைய பாதுகாப்பு தொடரை அவசியம் படிக்க வேண்டும் (மன்னிக்க! 😂)

  • நீங்கள் ஆன்டி-வைரஸ் மென்பொருள் வைத்திருந்தால் உடனே அப்டேட் செய்யுங்கள்.
  • மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள உங்கள் கணிணிகளுக்கான அப்டேட்களை உடனே செய்யுங்கள்
  • மைக்ரோசாப்ட் முன்பு கைவிட்ட விண்டோஸ் XP பதிப்புகளுக்கும் அப்டேட் வெளியிட்டுள்ளது. அதனை இங்கே க்ளிக் செய்து டவுன்லோடு செய்துக்க கொள்ளலாம். 
  • முடிந்தவரை மின்னஞ்சல்களில் வரும் சுட்டிகளை க்ளிக் செய்வதை தவிர்த்துவிடுங்கள். உதாரணத்திற்கு பேஸ்புக் தளத்தில் இருந்து செய்தி வந்தால், அதை க்ளிக் செய்யாமல் நேரடியாக உலவியில் பேஸ்புக் முகவரியைக் கொடுத்து உள்நுழையுங்கள்.
இணையம் பயன்படுத்தும் அனைவரும் இணைய பாதுகாப்பு குறித்து அறிந்துக்கொள்வது அவசியமான ஒன்றாகும். இல்லையென்றால் உங்கள் தகவல்களை மட்டுமின்றி பல சமயம் பணத்தையும் இழக்க நேரிடும்.
Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers